Creative Commons License
பீட்டர் தாத்தா பக்கங்கள் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.
Showing posts with label நிதி. Show all posts
Showing posts with label நிதி. Show all posts

Friday, January 16, 2015

நிதி சேர்க்கப் போனபோது நிகழ்ந்தவை !!!


1) 
அணிமூர் எனும் ஊரினிலே அன்பர் ஒருவரை பார்த்திடவே
ஐவரும் ஒன்றாய் சேர்ந்தோமே, அணிவகுத்தங்கே சென்றோமே
வழியோரம் ஒரு கட்டிலிலே உரித்த நாராய் ஒரு கிழவி
அடங்கிக் கிடந்தார்கள் மூச்சு அடங்கியவர்  போலாங்கே


கனிவோடு தலைவர் பார்த்தாரே, அருகினிலே அங்கு சென்றாரே
தோள் மேல் கைதனை வைத்தாரே ஆயா நலமா என்றாரே
என்னம்மா வேண்டுமென பரிவுடன் அவரைக் கேட்டாரே
காசுதான் வேண்டும் என்றவரும் கலக்கமுடன் சொன்னாரே.


ஐந்து ரூபாய்த் தாள் ஒன்றை எடுத்து அவர் கையில் திணித்தாரே
ஆயா இதனை வைத்துக்கொண்டு ஆப்பம் வாங்கிச் சாப்பிடுங்க
அன்பாய் சொன்னார் நம் தலைவர்
அகன்றோம் அடுத்த வீட்டுக்கு.


2)
ஆனங்கூரைத் தாண்டி ஒரு ஆகாசக்காட்டினிலே
சிறுகுடிசை கட்டி வாழும் சீரங்கனைப் பார்க்கச் சென்றோம்
ஒற்றயடிப் பாதை கூட இல்லாத அவ்விடத்தில்
வழியோரம் பார்த்துக்கொண்டே வண்டி ஓட்டிச் செல்கின்றோம்

தலைவர் பின்னே நானமர்ந்து தயக்கத்தோடு செல்லுகின்றேன்
சென்ற வழியில் வண்டி சருக்கியதே சேர்ந்திருவரும் விழுந்தோமே
சுருக்காக எழுந்து நின்றோம், சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டோம்
எனக்கு ஒன்றும் ஆகவில்லை , "உமக்கு?" என்று கேட்டாரே

ஒன்றுமில்லை என நான் உண்மைதனை கூறிவிட்டேன்
பயனமத்தை தொடர்ந்து பார்த்துவிட்டோம் குடிசைதனை
அடைந்துவிட்டோமானாலும் ஆளில்லை என்ன செய்வோம் ?
எங்களை அங்கே இருக்க விட்டு எங்கோ சென்றார் நம் தலைவர்


கிணற்றோரம் பணி செய்த அன்பரை அழைத்துக்கொண்டு
அட்டகாசமாய் அவரும் அடியெடுத்து நடந்து வந்தார்
பார்க்க வந்த காரியம் பயனொன்றும் அளிக்கவில்லை
தண்ணீரை அருந்திவிட்டு திரும்பி வந்து சேர்ந்துவிட்டோம்.


3)
வெளியில் அலைந்துவிட்டு வேலகவுண்டம்பட்டி வந்து நின்றோம்
சாயும் நேரமாயினும் சலிப்பு அவரை நெருங்காது
புத்தூரை சென்றடைந்து பத்தரைப் பார்த்து வர
புறப்படுங்கள் என்று சொல்லி விரட்டுவதைப் போல நின்றார்.


வழக்கம் போல் அவர் பின்னால் வண்டியிலே வந்தமர்ந்தேன்
சொன்ன இடம் தாண்டி வண்டி சூட்டோடு பறக்கிறது
பொம்மம்பட்டி பாதையிலே போய்க்கொண்டு இருந்தோமே
பொழுது விழுந்து இருள் பேயாட்டம் போடும் நேரம்
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊமையானேன், என்ன செய்ய


அள்ளாளபுரம் சென்று அன்பர் 'முத்து' வீடடைந்தோம்
அங்கே அவரில்லை , எங்கோ சென்றுவிட்டார்
தோட்டத்திலே மாடுகளை தொட்டுக் குளிப்பாட்டி நின்றார்
அங்கேயே சென்று அவரைக் கண்டோம், நைசாக பேசிப் பார்த்தோம் .


இருட்டிய பின்னர் யார் தான் காசை எடுத்துக் கொடுப்பார்கள்
எனக்குள் நினைத்துக் கொண்டு சப்தமின்றி சிரித்துக் கொண்டேன்
நினைத்தபடி அவர் சொன்னார் , வருகிறேன் சங்கம் என்றுரைத்தார்.
வேகவைத்த நிலக்கடலை வேண்டுமட்டும் தின்றோமே
வந்தனம் சொல்லி விட்டு பந்தாவாய் திரும்ப வந்தோமே


4)
பட்லூரில் பல அன்பர்களைப் பார்த்து வர
பரவசமாக நங்கள் பாய்ந்தோடிச் செல்லுகின்றோம்.
அன்பர்களைச் சந்தித்து அளவளாவிப் பேசிக்கொண்டோம் .
காசு வரும் வழி  தானே கண்களுக்குத் தெரியவில்லை.


போனால் போகட்டும் போ என்று புறம் காட்டித் திரும்புகின்றோம் 
பாதி வழியில் வண்டிப் பழுதாகிப் போனதுவே
என் செய்வோம் என்று ஏக்கப் பெருமூச்சோடு
உட்கார்ந்து ஓய்வெடுத்தோம் ஒரு சில மணித்துளிகள்.


வண்டியில் இருவரோடு கொக்கராயன்பேட்டை சென்றோம்
பழுது பார்க்கும் சிறுவனோடு பழைய இடம் நாடி வந்தோம்.
சக்கரத்தைக் கழற்றிக் கொண்டு சடுதியில் பேட்டை சென்றோம்
சீர் செய்து சக்கரத்தை மாட்டிக் கொண்டு வந்து சேர்ந்தோம்.


5)
பசி வந்த வேளையிலே பன்னு, ரொட்டி தான் உணவு .
டீ யில் நனைத்து அதை வாயில் போட்டுக் கொள்வோம்
ஒரு சில வேளைகளில் உண்ணாமல் கூட இருப்போம்.
கடும் பசி வந்த போது கவலையோடு சாப்பிடுவோம்.


இப்படி ஒரு நடையா இரு நடையா
பல நடைகள் நடந்துதான் பணம் சேர்த்தார் நம் தலைவர்.
ஒருவரிடம் நம் தலைவர் ஏழு  நடை நடந்து சென்றார்.
பெயர் சொல்ல விரும்பவில்லை, பெருமைக்குரியவரவர்.


அதன் பிறகு ஒரு நூறை அன்பாகப் பற்றுக் கொண்டார்.
அப்பப்பா இவர் செய்த அத்தனையும் எழுதுதற்கு
ஆசையுண்டு எந்தனுக்கு அவகாசந்தானில்லை.
எத்தனையோ நிகழ்சிகளை அனுபவத்தில் பார்த்துவிட்டோம்


சங்கமதை பலப்படுத்த சாத்வீகமாய் உழைக்கும்
தங்க மனம் பெற்றிலங்கும் தலைவறிவர் மனமகிழ,
உங்களை நான் கேட்பதெல்லாம் ஊக்கம் தரும் என்பதுதான்.
வந்தனங்கள் பல கூறி , வாழ்த்து சொல்லி அமருகின்றேன்.  .

 
                                              நன்றி    வணக்கம் 

                                                             
                                                                      குபீர் 
                                                  (குமாரமங்கலம் பீட்டர்)