Creative Commons License
பீட்டர் தாத்தா பக்கங்கள் by Vijay Periasamy is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.

Friday, July 24, 2015

அன்னைக்கு அஞ்சலி !!!

பாமாலை 

புனித கார்மேல் அன்னையின் ஆலயத் திறப்பு விழா
குன்னமலை 
நாள் : 18-07-2015


அருங்குணக்குன்று  நீ  ஆசைக்கற்கண்டு  நீ 
பெருங்குணங்கொண்டு  நல்  பேருபகாரி  நீ 
கார்மேலின்  அன்னை  நீ  கலங்கரை  தீபம்  நீ 
வரமருள்  வள்ளல்  நீ  அறம் பொருள்  இன்பம்  நீ 



அரும்பெரும் குணசீலர் 
ஆயர் பெருந்தகையே 
பெரும்பங்கு வகிக்கின்ற 
பிரகாசம் அடிகளாரே 

மாவட்ட மறைவட்ட  தலைவரேறே 
அருட்பணி தந்தையரே 
பெருந்திரளாய் குழுமியுள்ள 
விருந்தினரே எம் வணக்கம் 

ஆண்டகையின் அடிச்சுவடு 
பங்கு எங்கும் பதிந்தது 
தூண்டுதலாய் இருந்தது - எம் 
துயரமெல்லாம் பறந்தது 

மீண்டும் ஒரு நற்குருவால் 
கோயிலொன்று அமைந்தது 
வேண்டும் வேண்டுமே நல் 
வினைகள் பெருக வேண்டுமே 

ஆலயத்தை கட்டுதற்கு 
ஆண்டகையும் எண்ணினார் 
அருட்தந்தை  பிரகாசம் 
அதை நினைத்து துள்ளினார் 

எங்கள் குரு பிரகாசம் 
பங்கு பணி ஆற்றினார் 
அங்குமிங்கும் ஓடியாடி 
ஓங்குபுகழ் ஈட்டினார் 

சமைப்பதற்கு ஆளில்லை 
சங்கடங்கள் பலகண்டார் 
இமைப்பொழுதும் சோர்வின்றி 
இறைபணியை மேற்கொண்டார் 

ஆயர் சிங்கராயராலே 
ஆலயம் உருவானது 
அருட்பணி பிரகாசத்தால் 
ஆலயம் இறுதியானது 

பழமையான கோவிலொன்று 
பொலிவிழந்து நின்றது 
அழகாக உருமாறி 
எழிலோடு விளங்குது 



குன்னமலை என்னும் ஒரு 
சின்னஞ்சிறு ஊருங்க 
அன்னைமரி ஆலயத்தை 
நின்னு கொஞ்சம் பாருங்க 

வண்ணமிகு ஆலயத்தை 
கண் குளிர காணுகின்ற 
விண்ணக வேந்தர் இயேசு 
புன்னகை பூத்திடுவார் 

ஓரிடத்தில் நின்று கொண்டே 
ஊரை எண்ணிப் பார்க்கலாம் 
பாறை மேலே அமர்ந்துகொண்டே 
பேரைச் சொல்லி அழைக்கலாம் 

மணியின் ஓசை கேட்கும் போது 
புனிதை நினைவும் வருகுது 
மக்கள் ஒன்றாய் கூடியே 
ஆலயம் நோக்கி விரைகுது 

சென்னையிலே ஒரு சின்னமலை 
குன்னமலையிலும் ஒரு சின்னமலை 
எங்கே அந்த சின்னமலை ?
குன்னமலை தான் அந்த சின்னமலை 

சத்திய திருச்சபைக்கும் 
உத்தம கிறிஸ்துவர்க்கும் 
பத்தரை மாற்றுத்தங்கமென 
உத்தரியத் தாய்  விளங்குகிறாள் 

ஆரோக்கியத் தாயே என்றும் 
அடைக்கலம்  நீயே என்றும் 
பாரெல்லாம் போற்றுதம்மா 
காரிருளும் விலகுதம்மா 

கார்கால கோடை மழை 
பார் மீது விழுவதைப் போல் 
கார்மேல் அன்னயின் ஆசீரும் 
ஊரெல்லாம் பரவிப் பொழியுதம்மா 

உத்தரிய மாதாதான் 
ஊரை என்றும்  காப்பவர் 
அரிய மாதா பதம்  பணிந்து 
அனைவரும் வாழ்ந்து காட்டுவோம் .




                                             ஆக்கியோன்

                                     அய் . பீட்டர் 

                                            முன்னாள் ஆசிரியர் 
                                           (பணி :1950 - 1952)
                                             குன்னமலை , பரமத்தி தாலுகா 
                                          நாமக்கல் மாவட்டம் 















Friday, January 16, 2015

நிதி சேர்க்கப் போனபோது நிகழ்ந்தவை !!!


1) 
அணிமூர் எனும் ஊரினிலே அன்பர் ஒருவரை பார்த்திடவே
ஐவரும் ஒன்றாய் சேர்ந்தோமே, அணிவகுத்தங்கே சென்றோமே
வழியோரம் ஒரு கட்டிலிலே உரித்த நாராய் ஒரு கிழவி
அடங்கிக் கிடந்தார்கள் மூச்சு அடங்கியவர்  போலாங்கே


கனிவோடு தலைவர் பார்த்தாரே, அருகினிலே அங்கு சென்றாரே
தோள் மேல் கைதனை வைத்தாரே ஆயா நலமா என்றாரே
என்னம்மா வேண்டுமென பரிவுடன் அவரைக் கேட்டாரே
காசுதான் வேண்டும் என்றவரும் கலக்கமுடன் சொன்னாரே.


ஐந்து ரூபாய்த் தாள் ஒன்றை எடுத்து அவர் கையில் திணித்தாரே
ஆயா இதனை வைத்துக்கொண்டு ஆப்பம் வாங்கிச் சாப்பிடுங்க
அன்பாய் சொன்னார் நம் தலைவர்
அகன்றோம் அடுத்த வீட்டுக்கு.


2)
ஆனங்கூரைத் தாண்டி ஒரு ஆகாசக்காட்டினிலே
சிறுகுடிசை கட்டி வாழும் சீரங்கனைப் பார்க்கச் சென்றோம்
ஒற்றயடிப் பாதை கூட இல்லாத அவ்விடத்தில்
வழியோரம் பார்த்துக்கொண்டே வண்டி ஓட்டிச் செல்கின்றோம்

தலைவர் பின்னே நானமர்ந்து தயக்கத்தோடு செல்லுகின்றேன்
சென்ற வழியில் வண்டி சருக்கியதே சேர்ந்திருவரும் விழுந்தோமே
சுருக்காக எழுந்து நின்றோம், சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டோம்
எனக்கு ஒன்றும் ஆகவில்லை , "உமக்கு?" என்று கேட்டாரே

ஒன்றுமில்லை என நான் உண்மைதனை கூறிவிட்டேன்
பயனமத்தை தொடர்ந்து பார்த்துவிட்டோம் குடிசைதனை
அடைந்துவிட்டோமானாலும் ஆளில்லை என்ன செய்வோம் ?
எங்களை அங்கே இருக்க விட்டு எங்கோ சென்றார் நம் தலைவர்


கிணற்றோரம் பணி செய்த அன்பரை அழைத்துக்கொண்டு
அட்டகாசமாய் அவரும் அடியெடுத்து நடந்து வந்தார்
பார்க்க வந்த காரியம் பயனொன்றும் அளிக்கவில்லை
தண்ணீரை அருந்திவிட்டு திரும்பி வந்து சேர்ந்துவிட்டோம்.


3)
வெளியில் அலைந்துவிட்டு வேலகவுண்டம்பட்டி வந்து நின்றோம்
சாயும் நேரமாயினும் சலிப்பு அவரை நெருங்காது
புத்தூரை சென்றடைந்து பத்தரைப் பார்த்து வர
புறப்படுங்கள் என்று சொல்லி விரட்டுவதைப் போல நின்றார்.


வழக்கம் போல் அவர் பின்னால் வண்டியிலே வந்தமர்ந்தேன்
சொன்ன இடம் தாண்டி வண்டி சூட்டோடு பறக்கிறது
பொம்மம்பட்டி பாதையிலே போய்க்கொண்டு இருந்தோமே
பொழுது விழுந்து இருள் பேயாட்டம் போடும் நேரம்
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊமையானேன், என்ன செய்ய


அள்ளாளபுரம் சென்று அன்பர் 'முத்து' வீடடைந்தோம்
அங்கே அவரில்லை , எங்கோ சென்றுவிட்டார்
தோட்டத்திலே மாடுகளை தொட்டுக் குளிப்பாட்டி நின்றார்
அங்கேயே சென்று அவரைக் கண்டோம், நைசாக பேசிப் பார்த்தோம் .


இருட்டிய பின்னர் யார் தான் காசை எடுத்துக் கொடுப்பார்கள்
எனக்குள் நினைத்துக் கொண்டு சப்தமின்றி சிரித்துக் கொண்டேன்
நினைத்தபடி அவர் சொன்னார் , வருகிறேன் சங்கம் என்றுரைத்தார்.
வேகவைத்த நிலக்கடலை வேண்டுமட்டும் தின்றோமே
வந்தனம் சொல்லி விட்டு பந்தாவாய் திரும்ப வந்தோமே


4)
பட்லூரில் பல அன்பர்களைப் பார்த்து வர
பரவசமாக நங்கள் பாய்ந்தோடிச் செல்லுகின்றோம்.
அன்பர்களைச் சந்தித்து அளவளாவிப் பேசிக்கொண்டோம் .
காசு வரும் வழி  தானே கண்களுக்குத் தெரியவில்லை.


போனால் போகட்டும் போ என்று புறம் காட்டித் திரும்புகின்றோம் 
பாதி வழியில் வண்டிப் பழுதாகிப் போனதுவே
என் செய்வோம் என்று ஏக்கப் பெருமூச்சோடு
உட்கார்ந்து ஓய்வெடுத்தோம் ஒரு சில மணித்துளிகள்.


வண்டியில் இருவரோடு கொக்கராயன்பேட்டை சென்றோம்
பழுது பார்க்கும் சிறுவனோடு பழைய இடம் நாடி வந்தோம்.
சக்கரத்தைக் கழற்றிக் கொண்டு சடுதியில் பேட்டை சென்றோம்
சீர் செய்து சக்கரத்தை மாட்டிக் கொண்டு வந்து சேர்ந்தோம்.


5)
பசி வந்த வேளையிலே பன்னு, ரொட்டி தான் உணவு .
டீ யில் நனைத்து அதை வாயில் போட்டுக் கொள்வோம்
ஒரு சில வேளைகளில் உண்ணாமல் கூட இருப்போம்.
கடும் பசி வந்த போது கவலையோடு சாப்பிடுவோம்.


இப்படி ஒரு நடையா இரு நடையா
பல நடைகள் நடந்துதான் பணம் சேர்த்தார் நம் தலைவர்.
ஒருவரிடம் நம் தலைவர் ஏழு  நடை நடந்து சென்றார்.
பெயர் சொல்ல விரும்பவில்லை, பெருமைக்குரியவரவர்.


அதன் பிறகு ஒரு நூறை அன்பாகப் பற்றுக் கொண்டார்.
அப்பப்பா இவர் செய்த அத்தனையும் எழுதுதற்கு
ஆசையுண்டு எந்தனுக்கு அவகாசந்தானில்லை.
எத்தனையோ நிகழ்சிகளை அனுபவத்தில் பார்த்துவிட்டோம்


சங்கமதை பலப்படுத்த சாத்வீகமாய் உழைக்கும்
தங்க மனம் பெற்றிலங்கும் தலைவறிவர் மனமகிழ,
உங்களை நான் கேட்பதெல்லாம் ஊக்கம் தரும் என்பதுதான்.
வந்தனங்கள் பல கூறி , வாழ்த்து சொல்லி அமருகின்றேன்.  .

 
                                              நன்றி    வணக்கம் 

                                                             
                                                                      குபீர் 
                                                  (குமாரமங்கலம் பீட்டர்)

Sunday, January 11, 2015

இரங்கல் பா

மறைந்த தன்  நண்பர்/ உறவினர் ஒருவருக்காக ,தாத்தா எழுதிய இரங்கல் பா ..




தங்க மனம் படைத்த புகழ் மாணிக்கமே 
எங்கு சென்றாய் எமை விட்டு எம் தலைவா 
இங்கிருந்தால் ஓய்வு ஏது எனக் கருதி 
அங்கு சென்று ஓய்வெடுக்க போயினயோ ?


மனிதர் கூட புனிதராகி தெய்வம் போல 
இனிமையில் திளைத்திடலாம் சொர்க்கம் ஏகி 
தனிமையில் இனிமை காண தவசி போல 
துணிவோடு ஏகிவிட்டாய் எமை மறந்தாய் .


அப்பப்பா உனை மறந்து இருப்பதற்கு 
எப்படித்தான் மனது வரும் எங்களுக்கு 
ஒப்பில்லா மாமணியே  உம் புகழை 
எப்போதும் காத்திடுவோம் உறுதி கொள்வோம்.


                                                                                                                            குபீர்                                                                                 (குமாரமங்கலம் பீட்டர்)

Wednesday, December 31, 2014

புத்தாண்டு பா ! - 2015 வருக வருக


வாழுமுன்னே  வரலாறு  படைத்தவரே
வரலாற்றை இருகூராய் பிரித்தவரே
வராலாறாய்ப் போனவரே , எங்களுக்கு
வரமருள வேண்டுமென இறைஞ்சுகின்றோம்.


ன்னுமொரு வருடமதை எங்களுக்குத்  தந்தவரே
புன்னகைக்கும் குழந்தை யேசுவே புனித ஆவியானவரே
கன்னிமரி அன்னையரே சூசையெனும் மாமுனியே
புத்தாண்டின் வாழ்த்துக்களை பூரிப்புடன் வழங்குகின்றோம்.


ங்கு பணியேற்றிருக்கும்  பாசமுள்ள தந்தையரே
ஓங்கு புகழ் கல்விக்கூட உயரிய நல் தலைவரே
விருந்தினராய் எழுந்தருளும் வித்தகரே, சற்குருவே
கருணை மிகும் கன்னியரே கரங்குத்தோம் எம் வணக்கம்.


ங்கைமிகும் நற்குருவே   சாத்வீக மானவரே
உங்களது கட்டளையை  உவகையுடன் செய்துவரும்
எங்கள் வீட்டு இளைஞர்களும் ஏற்றமிகு இளைஞிகளும்
பங்கமுறா வாழ்வு பெற பரமனருள் வேண்டிடுவீர்.


ஞாலக்கல்வி புகட்டுகின்ற சிரமமொடு நில்லாமல்
ஞானக்கல்வி பயிற்றுகின்ற நற்சேவை புரிகின்றீர்
பாலகனாம் யேசுபிரான் பதம்நாடிப் பணிகின்றீர்
கோலஞ்செய் குழந்தையேசு குணம் தேடிப்பரவுகின்றீர்.


றை பரப்பும் பேரவையும் மரியாயின் சேனைகளும்
உருமாறிப் போகாமல் உரம்போட்டு வளர்த்திடுவீர்
விரைவாக செயல்படுத்த வேண்டியன செய்திடுவீர்
திறம்படவே நடந்திடவே இறையருளை இறைஞ்சிடுவீர்.


ன்பியங்கள் அத்தனையும் ஆர்வமுடன் செயலாற்றி
பண்பட்ட குடும்பமாக பக்தியுள்ள கூட்டமாக
என்றென்றும் நிலைத்து  நிற்க ஏற்றதொரு வழியைக்காட்டி
குன்றெனவே நிமிர்ந்து நிற்கும் நன்றென நடத்திச் செல்வீர்.



செயல்புரியும் பேரவையை செப்பனிட்டு வடிவமைத்து
தூய்மையான சங்கமென துலங்கிடவே அனுதினமும்
பங்கு பணியாற்றுகின்ற பாங்கினை கற்றுத் தந்த
சங்கைமிகும் எம்குருவை போற்றிப் பாராட்டுகின்றோம் .


காலையிலும் மாலையிலும் கானமழை பொழிவதற்கு
பாலு பாபுவின் பார்வையிலே பண்பட்ட இசைக்குழுவை
அழகுற அமைத்துக்காட்டி ஆரவாரம் ஏதுமின்றி
ஆலயத்தில் பாடுகின்ற ஆற்றலைத்தான் போற்றுகின்றோம்.


ந்தோனியார் பக்திதனை அனைவரும் கொண்டாடிடவே
முந்திய நாட்களிலே முழுதும் மறந்திருந்தோம்
அந்தப் பழக்கத்தை ஆர்வமுடன் கொண்டுவந்து
மங்கா புகழ்படைத்த மார்க்கோணியாரே வாழ்க வாழ்கவே .


லங்காரம் செய்வதிலே ஆர்வமதைக்  காட்டுகின்றீர்
ஜோடனைகள் செய்யும்போது சோறு தண்ணீர் மறந்திடுவீர்
கோயில்வேலை செய்துசெய்து வானில்சொத்து சேர்த்திடுவீர்
காசில்லாமல் பணிகலாற்றும் மாசில்லாமணியே வாழ்க வாழ்கவே.


தேவைகளை கண்டறிந்து செய்திடுவீர் மனமகிழ்ந்து
சேவை மனங்கொண்டோரை செர்த்தொன்றாய் கூட்டிடுவீர்
புவிதனிலே யாவரும் புகழ் பரப்பி வாழ்ந்திடவே
வரமருளும் வள்ளலையாம் வணங்குகின்றோம் வாழ்த்துகின்றோம்.


டையிலே தள்ளாட்டம் நாவிலே தடுமாற்றம்
இடையிலே வந்தெனக்கு இடையூறு செய்தாலும்
கடவுளின் துணையோடு கவிதனைப் புனைந்து


பாடுகின்றேன் இல்லை இல்லை படிக்கின்றேன்
உங்கள் முன்  படைக்கின்றேன்
பார்ப்போரே , ஏற்ப்பீரே !


ற்றாரே ஊராரே உங்களுக்கும் எம்வணக்கம்
கற்றோரே மற்றோரே களங்கமில்லா சோதரரே
பெற்றோரே பெரியோரே பேரவையின் உறுப்பினரே
வற்றாத நதிபோல வளம் பெற்று உயர்ந்திடுவீர் !


அனைவருக்கும் பீட்டர் தாத்தாவின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .




                                                                                                    குபீர் 
                                                  (குமாரமங்கலம் பீட்டர்)